Disable text selection

November 15, 2011

மரியாதை மானக்கேடல்ல!

கணவனுக்கு மனைவி மரியாதை தருவது என்பது அடிமைத்தனம் அன்று; அப்படி நினைப்பது மடமையும், தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுமே ஆகும்;நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது தம்பதிகளில் ஆண் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன்; மனைவி அவனை விட அறிவாளியாகவே இருந்தாலும், அவனுடைய வயதுக்கும், அவனுடைய கணவன் என்ற ஸ்தானத்துக்கும், அனுபவத்துக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை தருவதே பண்புடைய செயல்;

தான் அதிகம் சம்பாதித்தாலும், அவனை விட உயர்ந்த பதவியில் இருந்தாலும், யாருக்காக இதை எல்லாம் செய்கிறோம் என்று யோசித்துப்பார்த்தால் எடுத்தெறிந்தோ மரியாதைக்குறைவாகவோ நடக்கத்தோன்றாது;கணவனை விட மேம்பட்ட மனைவி (சம்பாத்தியதிலோ, படிப்பிலோ, பதவியிலோ..... எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்....), தன்னை விட மூத்தவனான தன் கணவனுக்கு மரியாதைக்குறைவின்றி அன்பாக, அனுசரணையாக, ஆதுரத்துடன் நடந்து கொண்டால், ஆஹா, தன் மனைவி தன்னை விட மேம்பட்டவளாக இருந்தாலும், தன்னை இவ்வளவு மதிப்பாக, கௌரவமாக நடத்துகிறாளே என்று கணவனும் பூரித்து, அவளை உச்சத்துக்கு ஏற்றப்பாடுபடுவான்......

இந்த உளவியல் கூட புரியாமல், இன்று பல பெண்கள் ஏதோ ஒரு சில வகையில் தன் கணவனை விட மேம்பட்டவர்களானதால் அவனை சற்றும் மதியாமல் நடப்பதும், பலர் அறிய அலக்ஷ்யப்படுத்துவதும், அவன் பண்ணும் உதவியையும் குலைத்து விடும்....... "அட சீ, இப்பவே இவ்ளோ ஆட்டம் போடறா, நாம இன்னும் உதவி மேல தூக்கி நிறுத்தினா இன்னும் என்ன பண்ணுவாளோ" என்று தான் நினைப்பார்கள்.... யாராக இருந்தாலும்........ கணவன் என்றில்லை, எந்த உறவாக இருந்தாலும்........இன்று, பெண்ணியம் பெண்ணியம் என்று பறக்கும் புதுமைப் பெண்களுக்கு இது புரிவதில்லை; மரியாதைக்குறைவாக நடப்பது விடுதலையின் வெளிப்பாடு அன்று......அது மடமையின் வெளிப்பாடு...... அறியாமையின் அறிகுறி........ ஆபத்தான ஆரம்பம்...... அவ்வளவே!

இது குடும்பத்தில் தான் என்றில்லை....... கணவன் என்று நான் பேசவில்லை.... ஏன் ஆணுக்கு என்று கூட வாதமிடவில்லை... யாராகதான் இருந்துவிட்டுப்போகட்டுமே.......... இன்னொரு உயிரை மரியாதைக்குறைவாக நடத்துவதும், அதிலும் குறிப்பாக நம்மைச்சார்ந்தவரை அவர் உணர்வு புரியாமல், புரிந்து கொள்ள விரும்பாமல் தன்னை முன்னிறுத்தி வினையாற்றும் சுயநலமும் பண்புகெட்ட செயல். அக்மார்க் அயோக்யத்தனம்!

இங்கு பெண்களை முன்னிட்டு கணவனுக்கு மரியாதை தராமல் நடப்பது தப்பு என்று எழுதுவதால், பெண்ணியப்பெண்கள் பாய வேண்டாம்......கணவன்மார்களை நான் 'தண்ணி தெளித்து' விட்டு விட்டதாக என்ன வேண்டாம்; தனது தூய துணைவியை காரணமில்லாமல் அவமானப்படுத்தும் கணவனும் அஹங்காரத்தின், தாழ்வு மனப்பான்மையின் சின்னம். பெண்ணிய முழக்கம் ஆபத்தான அலைவரிசைகளை இன்று ஒளிபரப்புவதால் இப்படி எழுத வேண்டியதாயிற்று.......

The bottom line is, ஆணோ பெண்ணோ - தன்னோடு வாழக்கையை பங்கு போட்டுக்கொண்ட துணையை மரியாதைக்குறைவாக, உணர்வுகளை உள்வாங்கிப்புரியாமல், inconsiderate ஆக, பண்பற்ற முறையில் நடத்தினால் அது மனமுதிர்ச்சியற்ற இருவரின் சேர்க்கையையே காட்டுகிறது....... அது இல்லறமே அல்ல.... நல்லறமோ அல்லவே அல்ல. உடலால் வளர்ந்தாலும் மனதால் வளராத இரு குழந்தைகள் ஆடும் அம்மா அப்பா விளையாட்டு....... அவ்வளவே............

கணவன் மனைவி உறவு ஆண்டான் அடிமை உறவு அன்று...... அது தோழமை...... நட்பு....... சொல்கிறவன் நானல்ல........ இதை முன்மொழிந்தது வேதம்........ "சகீ" (தோழியே) என வாய்நிறைய விளித்து மனம் நிறைய பிணைத்தது மனைவியை....... இதை வழிமொழிந்தவன் ஒரு கிழவன்....... தமிழ் வேதம் செய்த வள்ளுவன்........ "மடந்தையோடும் எம்மிடை நட்பு" என முழங்கினான்.......

எத்தனை ஆண்டுகள் வாழப்போகிறோம், மக்களே? கல்யாணமான பின், அதிகபக்ஷம் எழுபது ஆண்டுகளா? நட்பு முறை பூண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏன் இந்த  இந்த ஒன்றுக்கும் உதவாத ஈகோ, அஹங்காரம், மமதை, பண-திமிர், பதவி, போட்டி? அதுவும் உயிருக்குயிரான உறவில் என்ன இந்த அல்பத்தனம்?

ஒருவரை ஒருவர் அறிவோம்...... அறிந்து விரிவோம்............ இல்லறம் புரிவோம்...... வாழ்வோம்....... வாழத்தானே மணம்  செய்தோம்??? இங்கு என்ன ஈகோ? இருவரும் மனம் திறப்போம்......... தினம் சிறப்போம்........

2 comments:

sowmya said...

:) Nice post Bhuvaneshwar

bdharmal said...

Thanks :)