Disable text selection

October 17, 2012

என்ன(டா) அவசரம்?

மூன்று கேமெராக்கள் பொருத்தப்பெற்ற பிரசவ அறையில் சமீபத்தில் ஒரு சுகப்ப்ரசவம் (ஒரு படத்தில் இடம் பெறும் காட்சிக்காக) படமாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ஊருக்குள் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது என்னவோ பிரசவம் பற்றி விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் என பலர் பாராட்டுகின்றனர். எனக்கென்னவோ இது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகத்தான் படுகிறது.

தான் மட்டுமே (அல்லது) தன் கணவனுடன் மட்டுமே பகிர்ந்து, அனுபவிக்கக்கூடிய ஒரு உணர்வுபூர்வ, உன்னத தருணத்தினை எந்த ஒரு காரணத்துக்காகவும் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

எல்லா கண்ணும் நல்ல கண் அல்ல. அறிவுக்காக பார்க்கும் கண்களை விட, பெண்ணுடலைப் பார்க்கும் வக்கிர ஆசையால் பார்க்கும் கண்கள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

அட, அறிவுக்காக பார்க்கிற உத்தம சிகாமணி கூட, திருமணம் வரை காத்திருந்து தன்  மனைவி பிரசவிப்பதை பார்க்கலாமே? அப்போது கற்றுக்கொள்ளட்டுமே? அதற்கு முன்னரே குழந்தை பிறப்பதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆணுக்கு அப்படி என்ன அவசரம் மற்றும் தேவை? அப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டு மட்டும் என்ன பண்ணப்போகிறான்? புரியவில்லை.

எல்லாவற்றுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல், நேரம், காலம் இல்லையா? காத்திருக்க முடியாதா? கலவியை கூட கல்யாணத்துக்குப்பின் தான் கற்றுக்கொள்கிறோம் (நல்ல, பண்பட்ட ஆட்களை நான் சொல்கிறேன்).

சரி, அப்படியே புரிதலுக்காக, விழிப்புணர்வுக்காக என்று பிதற்றிக்கொண்டு இதனை சகஜமாக்கி விட்டால், இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து, விழிப்புணர்வு/புரிதல் என்னும் பெயரில் தாம்பத்திய உறவையும் படம் எடுத்து படம் வெளியிடுவார்களோ என்னமோ? கலி காலம்.  ஈஸ்வரா!

அது மட்டும் அல்ல, நாளை அந்த குழந்தை பெரியவளாகிய பின் அவளுக்கு இது பிடிக்குமா என்று நமக்கு தெரியுமா? இது அவள் மனத்தில் காயத்தை ஏற்படுத்தினால்?

ஓரளவுக்கு எல்லாருக்குமே பிரசவம் பற்றி தெரியும். சம்பந்தப்பட்ட கணவர்கள் வேண்டுமானால் பிரசவ வேளையில் தத்தம் துணைவியரோடு கூட இருந்து அந்த வலியை, வேதனை விரவிய பரவச தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம். தப்பே இல்லை. அது மனைவிக்கும் தைரியமாக, சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் education/awareness என்கிற பெயரில் ஊருக்கே காட்டுவது கலாசார சீரழிவு மட்டும் அல்ல, கணவன்-மனைவி என்னும் பவித்ரமான பந்தத்துக்கு ஏற்படுத்தும் இழுக்கு (இருவர் சம்மதமும் இருந்தாலும் கூட).

சில விஷயங்கள் புருஷன் - பத்நீ இருவருக்குள் தான் இருக்க வேண்டும். மூன்றாம் ஆளுக்கு தெரியக்கூடாது. புரிதலுக்காக என்று சொல்லிக்கொண்டு அதை அல்பங்களுக்கும் அம்பலமாக்கும் அவலம் எதற்கு?

சிந்திப்போமா? கருத்துப்பரிமாற்றங்களை வரவேற்கிறோம்.

+++++

பிரியங்களுடன்
புவனேஷ்

பி. கு: எழுபதுகளில் குப்த்ஞான் என்ற ஒரு திரைப்படம் வெளி வந்து சில அலைகளை உருவாக்கியது சிலருக்கு நினைவிருக்கலாம்.

கட்டுரையின் கடைசி வரிகளில் அல்பங்களுக்கும் அம்பலமாக்கும் அவலம்"என்று நான் எழுதி இருந்தேன் அல்லவா, அது இம்மாதிரி காணொளிகளை காணும் யாருக்கும் பொருந்தும். ஒரு ஆடவன், தன் மனைவி அல்லாத ஒரு வயது வந்த பெண்ணை, அதிலும் மாற்றான் மனைவியை எந்த கண்ணோட்டத்தில் எதற்காக பார்த்தாலும் அல்பத்தனமே. அது பெற்ற மகளாயினும் சரி, கூடப்பிறந்தவளானாலும்  சரி. அதற்காகத்தான் பிரசவ அறையிலும் மருத்துவச்சிகளை நாம் காலம் காலமாக வைத்தது.

1 comment:

thanusu said...

சென்ற ஆண்டு ஒரு ஆண்கிலப்பென்மணி தன் பிரசவத்தை தொலைக்காட்ச்சிக்கு விலை பேசி நேரலையில் காண்பித்தார். இவரும் அந்த வழியில் வந்தவரோ என்னவோ? நானும் இதை செய்தியாப் படித்தேன். சொல்ல என்ன இருக்கு. இது காசு செய்யும் வேலை. இங்கு காசே பிரதானம் . இப்படிப்பட்டவர்கள் தன் பிள்ளையை ஆராரோ ஆரிராரோ பாடி தூங்கக வைக்க மாட்டார்கள். F .M ரேடியோ ஒழிக்க வைத்தே தூங்க வைப்பார்கள்.

இந்த ( டா ) சின்ன வாத்தியாரா!!!!1