Disable text selection

October 24, 2012

முன்னேறிய பாரதம் (கவிஞர் தனுசு)

பட்டொளி வீசிப் பறக்குது
பாரதத்துப் பெருமை!
பட்டென்று தோணுது
அந்தக்
காரணங்களின் அருமை!

நம்
இந்தியத் திருநாட்டில்
லஞ்சமில்லை
ஊழலில்லை
போர்ஜரியில்லை!
நம்புங்கள்
இன்னும் சொல்கிறேன்
கேளுங்கள்!

அரசியலும் மணக்குது
ஆட்சியும் மணக்குது
மக்களும் மாறி
காட்சியும் மாறியது!

வாரிசு அரசியல்
ஜாதி அரசியல்
மத அரசியல்
சந்தர்ப்பவாதம்
சகுனி வேலை
குறுக்கு வழி
இட ஒதுக்கீடு
யாவும் ஒழிந்தது!

தடையில்லா மின்சாரம்!
திடமான சாலைகள்!
எட்டிப் பறக்கா எரிபொருள்!
பஞ்சமில்லா குடிநீர்!

தரமான மருத்துவம்!
முறையான கட்டணம்!
இலவசக்கல்வி!
கல்விக்கேற்ற வேலை!

அடிதடி
இல்லா அரசியல்!
வெட்டு குத்து
இல்லா விளம்பரங்கள்!

கட்சிகளில் கொள்கைகளே
பிரதானம்!
குடும்பத்தாருக்கு இல்லை
அதில்
வருமானம்!

மக்களின் இதயங்களில்
ஹிமாலய சிம்மாசனம்!
அது மட்டுமே ஆள்பவரின்
மூச்சுக்காற்று!

முப்பொழுதும்
மெய்ப்பொருள் தேடும்
அப்பழுக்கில்லா ஆன்மீகம்!
எப்பொழுதோ
வெறுத்துவிட்ட
இலவசம் எனும் தேன்மாயம்!

பெண்ணழிவைச் சித்தரிக்கா
சின்னத்திரை!
சீரழிவைச் சித்தரிக்கா
பெரியதிரை!

வணங்கப்படும் சாலைவிதி !
மதிக்கப்படும் சகலவிதி!
தட்சணை கேட்கா வரண்கள்
தாம்பத்யம் மாறா வரங்கள்!

ஆலயங்கள் தோறும் தரிசனம்
இதயங்களில் ஊறும் கரிசனம்!
யாருக்குமில்லை அகங்காரம்
எல்லோருக்கும் ராஜ அலங்காரம்!

மதமெல்லாம் சம்மதம்
மனிதரெல்லாம் ஓர்குலம்!
பெண்ணுக்கு முன்னுரிமை
மற்றோர்க்கு சமஉரிமை!

கடமை கண்ணானது
உடமை பொதுவானது!
கண்ணியம் உயிரானது
புண்ணிய மண்ணானது!

நேர்மை
இங்கே கொடிபிடித்ததோ
நிமிர்ந்த பாரதம்
நடை போடுதோ?

இத்தனை பூரிப்பைத்தரும்
பாரதத்தால்
வியப்படைய வேண்டாமா?

வேண்டாம்!
இவையாவும்
நிஜத்தில் நடக்குமா தெரியவில்லை
அதனால்
என்
கவிதையிலாவது இருக்கட்டுமே
முன்னேறிய பாரதம்!!!!

-தனுசு-

No comments: